வளர்க்கப்படும் மீன்களின் சிறப்புப் பண்புகளாவன :
I. குறைந்த வளர்ப்பு காலத்தில் அதிக வளர்ச்சி வீதம் கொண்டவை.
II. வழங்கும்துணை உணவை ஏற்றுக்கொள்பவை.
III. சில பொதுவான நோய்களை தாங்கும் திறன் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்கத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.
IV. கலப்பு மீன் வளர்ப்பிற்கு உட்படுத்தும் மீன்கள், அவற்றின் இயல்பில் பிற இன மீன்களை தாக்காமலும், மற்றவை குறுக்கிடாமலும் இணைந்து வாழும் தன்மையுடையனவாக இருப்பது அவசியம்.
V.வழங்கப்படும் உணவை உடல் பொருளாக மாற்றும் திறன் மிகுதியாக இருத்தல் அவசியம்.
வளர்ப்பு மீன்களின் வகைகள் :
வளர்ப்பு மீன்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம்
அ) உள்நாட்டு (அல்லது) உள்ளூர் நன்னீர் மீன் வகைகள் (Indigenous or native freshwater fishes) (பெருங்கெண்டைகளான (Major carps), கட்லா,லேபியோ மற்றும் கெழுத்திமீன்)
ஆ) நன்னீரில் வாழும் தன்மை கொண்ட உவர் நீர் மீன்கள் (பால்மீன், மடவை)
இ) வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் (சாதா கெண்டைகள்). (common carps).
அனைத்து மீன்களிலும் பெருங்கெண்டைகள் இந்தியாவில் வளர்க்க மிகப் பொருத்தமான இனங்களாக கருதப்படக் காரணங்கள்
1.விலங்கு மிதவை உயிரிகள், தாவர மிதவை உயிரிகள், அழுகும் களைச்செடிகள், கழிவுகள் மற்றும் நீர்த் தாவரங்களை உண்ணும் தன்மை பெற்றன.
2.கலங்கல் தன்மை அதிகமுள்ள, சிறிதளவு உயர் வெப்ப நிலையுடைய நீரிலும் வாழும் தன்மை.
3. நீரிலுள்ள 0, மாறுபாட்டை தாங்கும் திறன்.
4. ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது.
5.இவை அதிக உணவூட்ட மதிப்பு கொண்ட உண்ணத் தகுந்த மீன்கள் ஆகும்.
மீன்வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகள் :
வெப்பநிலை, ஒளி, மழை நீர், வெள்ளம், நீரோட்டம், நீரின் கலங்கல் தன்மை, அமில காரத்தன்மை (pH), உப்புத்தன்மை மற்றும் கரைந்துள்ள 0₂ போன்ற காரணிகள் மீன்வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகள் ஆகும்.
ஒளியும், வெப்பநிலையும் மீன் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
